ai image 
தேசிய செய்திகள்

ரூ.90-க்காக... தெலுங்கானாவில் ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் கண்டக்டர் பலி

கண்டக்டர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, அவரது தாயாருக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

பத்ராத்ரி

தெலுங்கானாவில் ரூ.90 மீத தொகை தொடர்பாக, ஓடும் பஸ்சில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் கண்டக்டர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி அரசு பஸ்சில் மவுனிகா என்ற பெண் பயணி, மகனுடன் ஏறினார். ரூ.100 பணம் கொடுத்து ரூ.10-க்கு டிக்கெட் வாங்கியுள்ளார். இதில், மீத தொகை கொடுக்க போதிய பணம் இல்லாத சூழலில், டிக்கெட்டின் பின்னால் பெண் கண்டக்டர் பிரவலிகா (வயது 24) எழுதி கொடுத்துள்ளார். மீத தொகையை பின்னர் வாங்கி கொள்ளும்படி கூறினார்.

பெண் கண்டக்டர்

இந்நிலையில், பேருந்து நிறுத்தம் நெருங்கியுள்ளது. அப்போது சில்லறை கொடுப்பது தொடர்பாக, பெண் கண்டக்டர் பிரவலிகாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மவுனிகா, ஓடும் பஸ்சில் இருந்து பிரவலிகாவை கீழே தள்ளிவிட்டார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும், அதில் பலனின்றி, நேற்று முன்தினம் இரவு பிரவலிகா உயிரிழந்து விட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பெண் பயணி கைது செய்யப்பட்டு உள்ளார். பலியான கண்டக்டர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி, அவரது தாயாருக்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT