புதுடெல்லி,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை ஈரான் வழியாக பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குள் ஊடுருவி, சதியில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கைது செய்தனர். இதை இந்தியா மறுத்தது.
எனினும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷணுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷன் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் கடந்த 20-ஆம் தேதி விசா அளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவைக் காண, அந்நாட்டுக்கு அவரது தாயாரும், மனைவியும் இன்று செல்லவுள்ளனர். குல்பூஷன் ஜாதவை சந்தித்து விட்டு உடனடியாக இருவரும் இந்தியா திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் இஸ்லாமாபாதில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் உடனிருப்பார். குல்பூஷண் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் சந்திப்பர். அதுதொடர்பான புகைப்படமும், விடியோவும் பிறகு வெளியிடப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.