பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படுகிறது. கூர்க் என அழைக்கப்படும் இங்கு ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் முக்கியமானது துபாரே யனைகள் பயிற்சி முகாம். குஷால் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த முகாமில் அட்டகாசம் செய்யும் யானைகள் பிடிக்கப்பட்டு கும்கிகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகள் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவிலும் பங்கேற்று வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் உள்ள இந்த முகாமில் உள்ள கும்கி யானைகளை காலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பாட்டி மகிழவும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறுவர்கள், பெரியவர்கள், வெளிநாட்டினருக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் யானைகள் மீது அமர்ந்து சவாரி செய்யும் வசதியும் உள்ளது.
இத்தகைய புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கர்நாடகம் மட்டு மின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அதுபோல் நேற்றும் துபாரே யானைகள் முகாமிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். காலை 10 மணி அளவில் கும்கி யானைகளை சுற்றுலா பயணிகள் குளிப்பாட்ட ஒவ்வொரு யானைகளையும் காவிரி ஆற்றுக்குள் இறக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள், பாகன்கள் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மார்த்தண்டா என்ற பெண் யானை ஆற்றுக்குள் இறக்கப்பட்டது. அது தண்ணீரில் உற்சாகமாக விளையாடிய படி இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மார்த் தாண்டா யானை அருகிலேயே கஞ்சன் என்ற ஆண் யானையை தண்ணீருக்குள் பாகன்கள் இறக்கியுள்ளனர். அப்போது திடீரென்று கஞ்சன் யானை ஆக்ரோஷமாகி, மார்த்தண்டாவை தாக்கியது. பதிலுக்கு மாத்தண்டா கஞ்சனை தாக்கியது. இரு யானைகள் இடையே மோதல் உருவானது. இதனால் சுற்றுலா பயணிகள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர்.
இந்தநிலையில் கஞ்சன் யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் மார்த்தண்டா என்ற பெண் யானை நிலைகுலைந்தது. கஞ்சன் யானை தனது கொம்பால் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த மார்த்தண்டா யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.