தேசிய செய்திகள்

லகிம்பூர் கேரி வன்முறை வழக்கு; ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

லகிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

தினத்தந்தி

லகிம்பூர் கேரி,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டம் லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியது. இந்த சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதில், மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் உயிரிழந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆஷிஷ் மிஸ்ரா அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி விசாரித்த ஐகோர்ட்டு ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயிரிழந்த ஒரு விவசாயி ஒருவரின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு அமர்வு முன் நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் லகிம்பூர் வன்முறையில் குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தும் குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டனர். மேலும் அலகாபாத் ஐகோர்ட்டை மீண்டும் அணுக அனுமதியும் அளித்தனர்.

இந்த நிலையில் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தர பிரதேசத்தில் போலீசில் சரணடைந்தார். அவர் மீண்டும் லக்கிம்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அலகாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு மீது நீதிபதி கிருஷ்ண பஹல் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. இதில், தீர்ப்பு இன்று (செவ்வாய் கிழமை) அறிவிக்கப்படும் என விசாரணை நிறைவில் தெரிவித்தது.

இதன்படி அலகாபாத் ஐகோர்ட்டில் வெளியான அறிக்கையில், மனித தன்மையற்ற குற்ற செயலில் குற்றவாளிகள் திட்டமிட்டே செயல்பட்டு அதனை நடத்தி உள்ளனர். அதனால், ஜாமீன் பெற அவர்களுக்கு தகுதி கிடையாது என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த மனு தள்ளுபடிக்கு முன்பு, வழக்கில் குற்றவாளிகளான லவ்குஷ், அங்கிததாஸ், சுமித் ஜெய்ஸ்வால் மற்றும் ஷிஷுபால் ஆகியோரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த 4 குற்றவாளிகளும் மற்றும் முக்கிய குற்றவாளி ஆஷிஷ் மிஸ்ராவும், அதிக செல்வாக்கு நிறைந்த அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் கோர்ட்டின் நீதியில் தலையிட கூடும் மற்றும் சான்றுகளை அழித்து, சாட்சிகளை கலைக்க கூடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களும் மறுக்க முடியாதது என அமர்வு தெரிவித்து உள்ளது.

மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டு உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த போராட்டத்தில் 4 விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்தனர். இதில், சம்பவம் நடந்த பகுதியில் சென்ற கார்களில் ஒன்றில் ஆஷிஷ் மிஸ்ரா காணப்பட்டார் என கூறப்பட்டது. எனினும், அவரது வழக்கறிஞர் வன்முறை சம்பவத்தின்போது ஆஷிஷ் மிஸ்ரா அந்த பகுதியில் இல்லை என வாதிட்டுள்ளார். அதற்கு சான்றாக 197 ஆவணங்களையும் கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்