தேசிய செய்திகள்

சிக்கிமில் சுரங்கப் பணியின்போது நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மீதமுள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கேங்க்டாக்,

சிக்கிமில் சுரங்க பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்ட விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 20-ந்தேதி சுரங்கப் பணி நடந்துகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தொழிலாளர்கள் 25 பேர் உள்ளே சிக்கி கொண்டனர்.

மீட்பு பணி

சம்பவம் பற்றி அறிந்து மாவட்ட கலெக்டர் அனுபா தம்லிங் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றார். இதனை தொடர்ந்து, தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. இந்த பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், சிக்கிம் போலீசார், தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த விபத்து பற்றி சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிலச்சரிவால், சுரங்கம் இடிந்து விழுந்து உள்ளது. மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். தேவையான, சாத்தியப்பட்ட உதவிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார். அதோடு, சுரங்க விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுரங்க நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அவர்களின் உடல்கள் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 தொழிலாளர்களை மீட்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.