பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சூர்யகாந்த்(வயது 34). வக்கீலான இவருக்கும், பிரியங்கா(30) என்ற பெண்ணுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அத்துடன், பிரியங்காவிடம் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதலாக வரதட்சணை வாங்கி வருமாறு கூறி சூர்யகாந்த் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரியங்கா தனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வர மறுத்துள்ளார். நேற்றும் குழந்தை இல்லாததை காரணம் காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் பிரியங்காவை சூர்யகாந்த் துன்புறுத்தினார்.
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சூர்ய காந்த், மனைவி பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர், இதனை தற்கொலை போல் சித்தரிக்க முயற்சித்துள்ளார். பிரியங்காவின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக இது பற்றி சிஞ்சோலி போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைந்து வந்து பிரியங்கா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கலபுரகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சூர்யகாந்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.