தேசிய செய்திகள்

நீதிபதியை மிரட்டிய வக்கீலுக்கு 1,000 மரக்கன்றுகள் நட உத்தரவு

1,000 மரக்கன்றுகளை நடவும், அவை அனைத்தும் பழ வகையை சேர்ந்த மரக்கன்றுகளாக இருக்க வேண்டும் என்றும் ரங்கசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு,

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வக்கீல் ஒருவர் 1,000 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல்

கொப்பல் மாவட்டம் கங்காவதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர், வக்கீல் ஆவார். கங்காவதி தாலுகாவில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ரங்கசாமி ஆஜராகி வாதிட்டார். அப்போது செசன்சு கோர்ட்டு நீதிபதியை மிரட்டும் விதமாக ரங்கசாமி பேசியதுடன், அந்த கொலை வழக்கு விசாரணையை வேறு கோர்ட்டுக்கு மாற்றக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, ரங்கசாமி தனக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்து, கோர்ட்டு விசாரணைக்கு இடையூறு செய்வதாக நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். மேலும் வக்கீல் ரங்கசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் பதிவானது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, ரங்கசாமி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டும், ரங்கசாமிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

அத்துடன் ரங்கசாமி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடரவும், கர்நாடக பார் கவுன்சில் மூலமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கடுமையான உத்தரவுகளை ரத்து செய்யும்படி கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் ரங்கசாமி மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடந்தது.

விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, வக்கீல் ரங்கசாமி மீதான கடுமையான உத்தரவுகளை நீதிபதி ரத்து செய்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,000 மரக்கன்றுகளை நடவும், அவை அனைத்தும் பழ வகையை சேர்ந்த மரக்கன்றுகளாக இருக்க வேண்டும் என்றும் ரங்கசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழக்கு ரத்து

மேலும் அவர் கூறுகையில், 'விசாரணையை கோர்ட்டு நீதிபதிகள் எந்த ஒரு பயமும், யாருடைய அழுத்தமும் இன்றி தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழ்நிலைகள் உருவாக வேண்டும். நீதிபதிகளுக்கு எந்த விதமான பிரச்சினைகளையும் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வக்கீல் ரங்கசாமி மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவர் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ரத்து செய்கிறேன்' என்று கூறி நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

SCROLL FOR NEXT