தேசிய செய்திகள்

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அரசுகள் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன - அமித்ஷா பேச்சு

காங்கிரஸ் அரசும், இடதுசாரிகள் அரசும் கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. கேரளாவில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வரும் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தில் இடதுசாரிகளின் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்ற கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கேரள அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா அம்மாநிலத்தின் சந்தனூர் பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா, கோவில் விவகாரங்களில் அரசுகள் தலையிடக்கூடாது என பாஜக நம்புகிறது. அதை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும். போலீஸ் உடையணிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் சபரிமலை பக்தர்களை தவறாக நடத்தினர். ஒருகாலத்தில் சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்ந்தது. மேலும், கேரளா மிகவும் படித்த மற்றும் அமைதி நேசிப்பவர்கள் உள்ள மாநிலமாக அறியப்பட்டது. ஆனால், இடது ஜனநாயக முன்னணி அரசும் ( இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசும் (காங்கிரஸ்) கேரளாவை ஊழலின் மையமாக மாற்றிவிட்டன என்றார்.

SCROLL FOR NEXT