தேசிய செய்திகள்

திருப்பதி கால்நடை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த சிறுத்தை

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு குழுவினர் சிறுத்தையைப் பிடித்தனர்.

திருப்பதி,

திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவப் பிரிவு அறை ஒன்றை சுத்தம் செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் சென்றார். அவர் கதவை திறந்தபோது, அறையின் உள்ளே சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்டு பிற ஊழியர்களும், பேராசிரியர்களும் உடனடியாக அந்த அறைக்கு வந்தனர். அவர்களை தாக்க முயன்ற அந்தச் சிறுத்தை, அங்குள்ள கழிவறைக்குள் சென்று பதுங்கியது. உடனடியாக அவர்கள் கழிவறையைப் பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் வளைகள், கூண்டு மற்றும் மயக்க மருந்து கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் சிறுத்தையைப் பிடித்தனர். கட்டிடத்தின் பின்புறம் உள்ள மரத்தின் வழியாக சிறுத்தை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

சிறுத்தையின் ஆரோக்கியம் சீராக இருப்பதாகவும், சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்திருந்து பின்னர் சேஷாசல காட்டுப்பகுதியில் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.