புதுடெல்லி,
ஆகஸ்டு 15-ம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை (reel) பகிர்ந்த பிரதமர் மோடி, "ஆகஸ்ட் 15-ஐ பெருமையுடன் கொண்டாடுங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) கனவை நனவாக்க உறுதிபூணுங்கள். ஹர் கர் திரங்கா, கர் கர் திரங்கா, ஹர் மன் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி)" என்று கூறினார்.
நாடு தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், "வாருங்கள், 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொண்டாட்டமாக மாற்றுவோம்" என்று பிரதமர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக இந்த வாரத்தில், பொதுமக்களை இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, மூவர்ணக் கொடியை "பெருமை" மற்றும் "ஊக்கத்தின் ஆதாரம்" என்று வர்ணித்திருந்தார்.
இதுதொடர்பாக தனது'எக்ஸ்' வலை தளத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "நமது மூவர்ணக் கொடி நமது பெருமை; நாட்டிற்காக எப்போதும் நமது சிறந்த பங்களிப்பை வழங்க அது நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாகத் திகழ்கிறது" என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த ஆண்டின் கருப்பொருள் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்போம்; 'விக்சித் பாரத்'தை (வளர்ந்த இந்தியாவை) உருவாக்குவதில் பங்களிக்க நமது கூட்டு உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டுக்கான முயற்சிகள் 'வந்தே மாதரம்' பாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதிலும், அதுவும் அப்பாடலின் 150-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இது அமைந்திருப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தேசியக் கொடியைத் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு வந்து ஏற்றும் வகையில் ஊக்குவிப்பதற்காக 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' (சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா) திட்டத்தின் கீழ் 'ஹர் கர் திரங்கா' இயக்கம் தொடங்கப்பட்டது.