லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட வீடியோவில், ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் கைகளில் கங்கை நதியின் நீரை ஏந்திக் கொண்டு சத்தியம் செய்கின்றனர். அவர்கள் மாநாகராட்சி விவகாரங்கள் மூலம் கமிஷன் அல்லது சட்டவிரோதமான முறைகளில் தங்களுக்கு கிடைகும் பணத்தை சரிசமமாக பங்கு பிரிப்போம் என்று உறுதி கூறுகின்றனர்.
மேலும், தங்கள் குழு எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் என்றும், குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை வந்தால் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் திரும்ப மாட்டோம் என்றும் அவர்கள் சத்தியம் செய்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஜ்னீஷ் குப்தா வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மாவட்ட கலெக்டருடன் ஆலோசிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட வீடியோ காட்சி தொடர்பான உண்மைகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சவுமியா குரு ராணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.