போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாமில், ரெயில்வே கேட் மூடப்பட்டுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது ரெயில் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹிசார்-வல்சாட் எக்ஸ்பிரஸ் ரெயில், ரெயில்வே கடவுப்பாதையை நெருங்கியபோது அங்கு தண்டவாளத்தில் சிக்கியிருந்த கார் மீது மோதியது.
ரெயில் மோதியதில் கார் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது காரில் இருந்த ஓட்டுநர், ரெயில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக வெளியே குதித்ததால் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் காப்பாளரின் அலட்சியமே காரணம் எனக் கார் உரிமையாளர் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ரெயில் வருவதற்கு இன்னும் 5 முதல் 10 நிமிடங்கள் இருந்தபோதே கேட் காப்பாளரிடம் தகவல் தெரிவிக்கச் சென்றேன். ஆனால், அவர் நான் கூறியதைக் கேட்கவில்லை. அவரிடம் சென்றபோது அவர் முழுமையாக மது போதையில் இருந்ததைக் கண்டேன். என்னுடைய பேச்சைக் கேட்காமல் இருந்தார். எனக்கே ஏதாவது நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கேட் காப்பாளருடன் நடந்த உரையாடலையும் கார் உரிமையாளர் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். அதில், தான் அரை மணி நேரத்திற்கு முன்பு மது அருந்தியதாக கேட் காப்பாளர் கூறுவது பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் காப்பாளர் மது அருந்தியிருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இரவு தாமதமாக மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கேட் காப்பாளரின் ரத்த மாதிரியைச் சேகரித்து, அவர் மது அருந்தியிருந்தாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ரத்லாம் கோட்ட ரெயில்வே மேலாளர் (DRM) அஷ்வினி குமார் கூறுகையில், ரெயில்வே கேட் மூடப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் கடவுப்பாதைக்குள் நுழைந்ததால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
மேலும், ரெயிலுக்கான சிக்னல் ஏற்கெனவே பச்சை நிறமாக மாறியிருந்ததால், கடவுப்பாதையை நெருங்கிய ரெயிலைப் பின்னோக்கி இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்.
“அதிர்ஷ்டவசமாக, ரெயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தண்டவாளங்களும் சேதமடையவில்லை. சம்பவ இடத்திலிருந்து ரெயிலை விரைவாக இயக்குவதே எங்களின் முதல் முன்னுரிமை” என்று அவர் தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்டவாளத்தில் சிக்கியிருந்த சேதமடைந்த காரை அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
கார் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கேட் காப்பாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்தார்.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, ரெயில்வே கேட்டை மூடும்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா, கேட் காப்பாளர் மது போதையில் இருந்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
குற்றச்சாட்டுகள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.