புனே
மராட்டிய மாநிலத்தில் காவோன்தேவி மார்க்கெட் பகுதியில் கடந்த மே 21-ந்தேதி பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணியில், ஈடுபட்டவர்களில் சாகர் ஷிண்டே மற்றும் பாதுகாவலர் காலு கதேகர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் 155 கடைகள் எரிந்து சாம்பலாகின. இந்த நிலையில், தானே மாநகராட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகளை சார்ந்த 2 பேர் அவர்கள் இருவரின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளனர்.
இதுபற்றி சிவசேனாவை சேர்ந்த பவன் கதம் கூறும்போது, அவையின் தலைவரான ஹனுமந்த் ஜக்டேல் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நஜீப் முல்லா ஆகிய இருவரும், தங்களுடைய மீதமுள்ள 5 ஆண்டு கால சம்பள தொகை எல்லாவற்றையும், பாதிக்கப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு வழங்க முடிவு செய்துள்ளனர் என்றார்.
சிவசேனாவை சேர்ந்த வேறு சில மாநகராட்சி பணியாளர்களும் தங்களுடைய சம்பளம் எல்லாவற்றையும் வழங்க முடிவு செய்துள்ளனர் என கதம் கூறியுள்ளார். பணியின்போது உயிரிழந்த அவர்கள் 2 பேருக்கும், வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் தியாகி அந்தஸ்து வழங்குவதற்கான முறையான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்றும் கதம் கூறினார்.
இதனால், தியாகிகளுக்கான பலன்கள் மற்றும் உதவிகள் அனைத்தும் அந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்க பெறும். இதுபற்றி முல்லா கூறும்போது, இது நிதியுதவி மட்டுமல்ல. சமூக பொறுப்பு மற்றும் மனிதாபிமானத்திற்கான வெளிப்பபாடு.
இந்த சோக சம்பவம் என்னை கடுமையாக பாதித்து விட்டது. அதனால், இந்த முடிவை மேற்கொண்டேன் என கூறியுள்ளார். இதேபோன்று ஜக்டேல் கூறும்போது, இதனை கருணை செயல் என கூறுவதற்கு பதிலாக தார்மீக பொறுப்பாக கொள்ள வேண்டும். குடிமக்களை பாதுகாப்பதற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்தவர்களுக்கு துணை நிற்பது நம்முடைய கடமை என்று ஜக்டேல் கூறினார்.