தேசிய செய்திகள்

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை

புதுச்சேரியில் மகளிருக்கு வழங்கப்படும் மாத நிதியுதவி தொகையானது 2 மாதங்களுக்கு சேர்த்து வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரி,

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற நிதி உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் முதல் 1 கோடியே 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதேபோன்ற திட்டத்தை புதுச்சேரியிலும் செயல்படுத்த முதல்-மந்திரி ரங்கசாமி திட்டமிட்டார். ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக புதுச்சேரி அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

தமிழகத்தில், ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக 3,000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் மகளிர் உதவித்தொகை முன்கூட்டியே வழங்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பில் பெண்கள் இருந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரியின் கவர்னரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், 'புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட் டிற்கு வாழும் 63 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகை 2 மாதங்களுக்கு மாதம் ரூ.2,500 வீதம் ரூ.5 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அந்த வீட்டின் பெண்ணின் கைகளிலேயே உள்ளது. நீங்கள் வெறும் குடும்ப தலைவிகள் மட்டுமல்ல, சமூகத்தை வழிநடத்தும் ஆளுமைகள். உங்களின் பொருளாதார சுதந்திரம் சமூக முன்னேற்றத்தின் அடையாளம். இந்த 2 மாத நிதி உதவி யும் உங்கள் சுயசார்பு வாழ்வுக்கு ஒரு சிறு ஊக்கமாக அமையும் என கவர்னர் கைலாஷ்நாதன் பதிவிட்டுள்ளார்.