அமராவதி,
மணமகனின் செயலைக் கண்டும், மகளின் எதிர்கால வாழ்க்கையை நினைத்தும் திருமணத்தை துணிச்சலாக நிறுத்தி உள்ளார் மணமகளின் தந்தை.
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலத்தின் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, மணமக்களை காரில் ஏற்றி உறவினர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாகமாக ஊர்வலம் நடத்தினர்.
அப்போது, உறவினர்கள் மணமக்களை நடனமாடச் சொன்னார்கள். உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மணப்பெண்ணும் மகிழ்ச்சியாக நடனமாடச் சம்மதித்து ஆட வந்தார். ஆனால், மணமகனுக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை என கூறப்படுகிறது. எனவே மணப்பெண்ணும் ஆடக்கூடாது என எல்லோர் முன்னிலையிலும் ஆக்ரோஷமாகக் கோபப்பட்டு, அவரைத் தடுத்து நிறுத்தினார்.
திருமணத்திற்கு முன்பே பொதுவெளியில் தனது மகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, ஆதிக்கப் போக்குடன் நடந்துகொள்ளும் மணமகனின் செயலைக் கண்டு மணப்பெண்ணின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.
“கல்யாணத்துக்கு முன்பே என் மகளிடம் இப்படி ஆதிக்கம் செலுத்த நினைப்பவர், திருமணத்திற்குப் பிறகு அவளது வாழ்க்கையை எப்படி நடத்துகிறார் என்று பார்ப்பது? என் மகளின் சுதந்திரமும், சுயமரியாதையும்தான் எனக்கு முக்கியம்” என்று கூறினார். மேலும் இந்த திருமணம் இனிமேல் நடக்காது என்று கூறி தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மணமகள் வீட்டார் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இறுதியில், இரு தரப்பு சம்மதத்துடன் வரதட்சணை மற்றும் கொடுக்கல் வாங்கல் பரிசுகள் திருப்பித் தரப்பட்டுத் திருமணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
மகளின் எதிர்கால நல்வாழ்விற்காகத் தந்தை எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு, தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.