மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை மக்களவை கூடியவுடன் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியை தொடர்ந்த நிலையில், முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் 9-ஆம் தேதி காலை வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது குறித்து வேதனை தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: “பட்ஜெட் தொடரின் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் அமளியால் வீணாகியுள்ளது. மக்கள் தங்களின் பிரச்னைகளைப் பேசுவதற்காகவே உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கங்களை எழுப்புவதற்காக அல்ல. அவை சுமுகமாக நடைபெற வேண்டும். 140 கோடி மக்கள் அவை நடவடிக்கைகளை பார்க்கிறார்கள். பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய மக்கள் உங்களை அவைக்கு அனுப்பவில்லை. அவை நேரம் வீணாவதால் உறுப்பினர்களின் வாய்ப்புகள் வீணாகின்றன” என்று கூறினார்.