தேசிய செய்திகள்

இரட்டை கொலை வழக்கில் லாரி டிரைவருக்கு தூக்கு தண்டனை: பாலக்காடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கேரள மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவர், தனது மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததாக ஒரு பெண்ணின் கணவர் மற்றும் அவரின் தாய் ஆகிய 2 பேரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

பாலக்காடு,

இரட்டை கொலை வழக்கில் லாரி டிரைவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாலக்காடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இரட்டை கொலை

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நென்மாரா போத்துண்டி பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61), லாரி டிரைவர். இவருக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் விவாகரத்து பெற்று செந்தாமரையின் மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இதற்கிடையே கடந்த 31.8.2019 அன்று பக்கத்து வீட்டை சேர்ந்த சஜிதா என்பவரை முன்விரோதம் காரணமாக செந்தாமரை கொலை செய்தார். இந்த வழக்கில் நென்மாரா போலீசார் செந்தாமரையை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததாக சஜிதாவின் கணவர் சுதாகரன், அவரது தாய் லட்சுமி ஆகியோரை கடந்த 27.1.2025-ல் அரிவாளால் வெட்டிக்கொன்றார். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நென்மாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தாமரையை போலீசார் கைது செய்தனர்.

தூக்கு தண்டனை

இரட்டை கொலை வழக்கை விசாரித்த பாலக்காடு கோர்ட்டு செந்தாமரையை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளி செந்தாமரைக்கு தூக்கு தண்டனை விதித்தது. கொலையானவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் செந்தாமரை வழங்க வேண்டும். அவரால் வழங்க முடியாத பட்சத்தில், கேரள அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.