மோர்பி,
ஆட்டு மந்தை மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 25 ஆடுகள் பலியாகி 30 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மலியா - கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டு மந்தை சாலையை கடந்துள்ளது. திடீரென அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று சாலையை கடந்து கொண்டிருந்த ஆட்டு மந்தை மீது பயங்கரமாக மோதியது. விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி அங்கிருந்து நிற்காமல் சென்றது. இதில், 25 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. மேலும், 30 ஆடுகள் பலத்த காயமடைந்தன.
இது குறித்து ஆட்டின் உரிமையாளர் மலியா மியானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி தப்பி சென்ற லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.