தேசிய செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி... சிதறிய வெங்காயத்தை போட்டி போட்டு அள்ளிய கிராம மக்கள்!

வளைவில் திரும்பும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

ராய்ச்சூர்,

ராய்ச்சூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து சிதறிய வெங்காயத்தை கிராம மக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெங்காயம் ஏற்றி சென்ற லாரி

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் இருந்து நேற்று காலை ஒரு லாரி வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ராய்ச்சூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் சுமார் 20 டன் வெங்காயம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.

அந்த லாரி மான்வி தாலுகாவில் உள்ள கப்கல் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

விபத்து

இந்த விபத்தால் லாரிகளில் வைக்கப்பட்டு இருந்த வெங்காய மூட்டைகள் சிதறின. இந்த விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் காயம் அடைந்தனர். வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியது பற்றியும், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சிதறியது பற்றியும் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.

இதனால் விபத்து நடந்த பகுதிக்கு கப்கல் கிராமமக்கள் படையெடுத்து வந்தனர். அவர்கள் போட்டா போட்டியில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து சிதறி கிடந்த வெங்காய மூட்டைகளை தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் காயமடைந்த டிரைவர், கிளீனருக்கு உதவி செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது.

வீடியோ வைரல்

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து சிதறிய வெங்காயத்தை பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றதை சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சிதறி கிடந்த வெங்காயத்தையும் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றதை காண முடிந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த மான்வி போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து தொடர்பாக மான்வி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT