புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பூஜ்ஜிய நேரத்தில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார் பேசுகையில், பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையின் கீழ் வணிக லாரி உரிமையாளர்கள் தங்கள் முழு வாகனத்தையும் அழிப்பதற்கு பதிலாக, பழைய இன்ஜின்களை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது;-
பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை மூலம் மாசுபாட்டை குறைத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் குறிக்கோள் நிச்சயமாக ஒரு சிறந்த பணியாகும். இருப்பினும், வணிக வாகனங்களை, குறிப்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளை கட்டாயமாக அழிப்பது எண்ணற்ற லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
இந்திய சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பாக இருக்கும் இந்த லாரிகள் நல்ல வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. மாசுபாட்டிற்கான முக்கிய காரணம் பொதுவாக பழைய இன்ஜின்தான். பழைய மாசுபடுத்தும் இன்ஜின்களை புதிய BS6 இன்ஜின்களாக மாற்றுவது, தொழில்நுட்ப ரீதியாக வாகனங்களைப் புதுப்பிக்கும் ஒரு நடைமுறை மற்றும் செலவு குறைந்த தீர்வாகும்.
இன்ஜினை மட்டும் மாற்றலாம் எனும்போது, நல்ல நிலையில் இருக்கக் கூடிய முழு லாரியையும் அழிக்க வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? புதிய வாகனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிட முடியாத சிறிய லாரி உரிமையாளர்கள் மீது இந்த கொள்கை பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது.
குறைந்த ஏற்றுமதி திறன் காரணமாக தளவாடச் செலவுகள் அதிகரிக்கவும் இது வழிவகுக்கிறது. இறுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் பணவீக்கம் ஏற்படுகிறது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகளின் உரிமையாளர்கள் பழைய இன்ஜின்களை புதிய சான்றளிக்கப்பட்ட BS6 என்ஜின்களாக மாற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.