தேசிய செய்திகள்

ஆந்திராவில் வேலைக்குச் சென்ற பெண்கள் மீது பாய்ந்த லாரி: 4 பேர் உயிரிழப்பு!

மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காக்கிநாடா மாவட்டம் கொவ்வூருவை சேர்ந்தவர்கள் சத்தியவதி (60), கிருஷ்ணவேணி (35), செட்டம்மா (45), செல்லூர் அன்னவரம் (45). கூலி தொழிலாளர்களான இவர்கள் இன்று காலை வேலைக்காக புறப்பட்டனர்.

அப்போது கொவ்வூர் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.