தேசிய செய்திகள்

தாமரை எங்கும் மலரும் - பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் வங்காளப் பெண்களின் உரிமைகளை அபகரித்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இன்று (ஏப்.23) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காளம், மதுராபூரில் நடைபெற்ற விஜய் சங்கல்ப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

இந்தப் புனித மண்ணிலிருந்து கங்கை அன்னையை நான் வணங்குகிறேன். மதுராபூர், டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.

உங்கள் வருகையே உங்கள் முடிவை உணர்த்திவிட்டது. மே 4 ஆம் தேதி வெளியாகப்போவது வெறும் தேர்தல் முடிவுகள் மட்டுமல்ல. ஒரு மாற்றம் நிகழும் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள்

மேற்கு வங்காளம் முழுவதும் ஒரு மாற்றத்துக்கான அலை வீசுகிறது. முதல் கட்டத்தில் திரிணமுல் காங்கிரஸுக்கு எதிராக பெண்களும் இளைஞர்களும் வாக்களித்த விதத்தை நாடு முழுவதும் பார்த்து வருகிறது.

இன்னும் 10 நாள்களில் வாக்குகள் எண்ணப்படும்போது, தாமரை எங்கும் மலரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதுவே மாற்றத்துக்கான சரியான நேரம் என்று வங்காள மக்களையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

நான் வங்காள மக்களிடம், குறிப்பாக எனது முதல் முறை வாக்காளர்களிடம், வங்காளத்தின் இரக்கமற்ற அரசைக் கவிழ்க்க இதுவே சரியான தருணம் என்று கூறுகிறேன். இதுவே உகந்த நேரம். நம் அனைவரையும் ஆசீர்வதிக்க இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தாய்மார்களும் சகோதரிகளும் இங்கு கூடியிருப்பது, திரிணாமுல் காங்கிரசின் தூக்கத்தைக் கெடுப்பது நிச்சயம்.

திரிணாமுல் காங்கிரஸ் வங்காளப் பெண்களின் உரிமைகளை அபகரித்துள்ளது. வங்காளம் துர்கா தேவியை வழிபடும் பூமி. திரிணாமுல் காங்கிரஸ் பலமுறை பெண்களின் கண்ணியத்தை அவமதித்து, அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்துள்ளது. உங்களின் ஒரே ஒரு வாக்கு, இதற்காக அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.