புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலத்தில் 5-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த இந்திப் படத்தின் பாடல் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் அண்மையில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்தப் பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ல் வெளியான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்கள் பயிலும் பாடப் புத்தகத்தில் திரைப்படப் பாடல் அச்சிடப்பட்டது எப்படி என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
‘நிம்புடா நிம்புடா' என்று தொடங்கும் இந்தப் பாடல், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது. ஏற்கெனவே அச்சிடப்பட்ட தாள்கள், பாடப்புத்தகத்தை தொகுக்கும்போது தவறுதலாக சேர்க்கப்பட்டு விட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநில நாட்டுப்புறப் பாடலான இது மிகவும் பிரபலமான பாடல். இந்த ‘நிம்புடா நிம்புடா' பாடல் பாடப்புத்தகத்தில் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஒடிசா மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (எஸ்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் 1,600-க்கும் மேற்பட்ட பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தப் புத்தகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 8-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் அதிகபட்சமாக 705 பிழைகள் உள்ளன.
இதையடுத்து பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறை மந்திரி நித்யானந்த கோண்ட் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.