போபால்,
மத்தியப் பிரதேசம் மாநிலம், மன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை 10-ல் குதார் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் பண்ணை வீட்டிற்கு ராம்கேஷ் கேவட் (வயது 28), பிரதீப் கேவட் (வயது 30) மற்றும் ஹிமான்ஷு கேவட் (வயது 26) ஆகிய மூன்று பேரும் சென்றனர்.
பின்னர், இன்று (புதன்கிழமை) பைக்கில் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். பைக்கை ஹிமான்ஷு கேவட் ஓட்ட மற்ற 2 பேர் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்தனர். இவர்கள் மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள மன்பூர்-ஜெய்சிங்நகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களின் அருகில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் நிலைகுலைந்து போய் மூன்று பேரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். மூவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ராம்கேஷ் கேவட் படுகாயமடைந்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மன்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே பிரதீப் கேவட் மற்றும் ஹிமான்ஷு கேவட் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மன்பூர் சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பிரதீப் கேவட் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரி முகேஷ் மார்ஸ்கோல் தெரிவித்தார். பைக்கை ஓட்டிய ஹிமான்ஷு கேவட் என்பவருக்கு மன்பூர் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது .
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் ஷாஹ்தோல் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் ஆய்வில் கார் ஓட்டுநர் தீரேந்திர மஹோபியா என அடையாளம் கண்டு போலீசாரின் காவலில் எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் முகேஷ் தெரிவித்தார்
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டன.