தேசிய செய்திகள்

மத்தியபிரதேச படகு விபத்து: 5 வயது சிறுவனின் உடல் மீட்பு - பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக சுற்றுலாத்துறை சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 30ம் தேதி அணையை சுற்றிப்பார்க்க படகில் 41 பேர் பயணித்தனர்.

அணையின் நடுப்பகுதியில் சென்றபோது பலத்த காற்று காரணமாக படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர், விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்த 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், படகு விபத்தில் தண்ணீர் மூழ்கி உயிரிழந்த 5 வயது சிறுவனின் உடலை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர். இதன் மூலம் படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. எஞ்சிய ஒருவரின் உடலை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் காமராஜ் என்பவரின் உடலை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.