இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பாகீரதபுரா பகுதியில் மாசு கலந்து குடிநீரை பருகிய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. ஆல்கு சவுத்ரி (வயது 70) என்பவர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 9-ந்தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதன்பின்னர் சுவாச பாதிப்புகளும் ஏற்பட்டதில் உயிரிழந்து உள்ளார். அந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த பகுதியில் ஒரு பொது கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 பேருக்கு இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.