போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச் பசோடாவில், வாடகை வீட்டின் 3-வது மாடி பால்கனியில் நின்றுகொண்டு குட்கா எச்சிலை வெளியே துப்பிய முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபுலால் குப்தா (வயது 65), கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச் பசோடாவில், காயத்ரி நகரில் தங்கி கட்டிட வேலையில் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த (வெள்ளிக்கிழமை) அன்று மதியம் சுமார் ஒரு மணியளவில், அவர் தனது வீட்டின் 3-வது மாடி பால்கனியில் நின்று குட்கா மென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பால்கனியில் இருந்து வெளியே குட்கா எச்சிலைத் துப்பியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அந்த கட்டிடத்திற்கு மிக அருகில் சென்றுகொண்டிருந்த 11 கேவி (11,000 வோல்ட்) உயர் அழுத்த மின்கம்பியின் மீது அவரது எச்சில் தாரை பட்டுள்ளது. மனித எச்சிலில் ஈரப்பதமும் உப்புகளும் இருப்பதால் அது எளிதில் மின்சாரத்தைக் கடத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் மின்கம்பியில் இருந்து எச்சில் தாரை வழியாக மின்சாரம் நொடிப் பொழுதில் முதியவரின் உடலில் பாய்ந்தது. இதில் உடல் கருகி அவர் பால்கனியிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கும் கட்டிடங்களுக்கும் மிக அருகில் ஆபத்தான முறையில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வது குறித்தும், மின்கம்பங்கள் சரியாக பராமரிக்கப்படாதது குறித்தும் மின்சாரத் துறையிடம் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.