தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: விநாயகர் சிலை கரைப்பில் சோகம்; மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி

கந்த்வா மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலியானார்கள்.

மண்ட்லா

மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு சம்பவத்தின்போது, மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானார்கள்.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ஹிராபூர் கிராமத்தில் விநாயகர் சிலை பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள், நேற்று முன்தினம் நீர்நிலையில் கரைக்கப்பட்டன. பிறகு, சிலை அமைப்புக்குழுவை சேர்ந்த 8 இளைஞர்கள், அந்த பந்தலில் தூங்கினர்.

4 பேர் பலி

இந்நிலையில், நேற்று அதிகாலை பந்தலுக்கு மேலே சென்ற மின்ஒயர் அறுந்து, தூங்கி கொண்டிருந்த இளைஞர்கள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். ஒருவர் காயமின்றி உயிர் தப்பினார்.

பலியானவர்களின் பெயர்கள் ஜைன் பான்வரே (வயது 19), ரவி ஜாரியா (வயது 24), கிருஷ்ணகுமார் பான்வரே வயது (18), வீரேந்திர பான்வரே (வயது 24) என தெரிய வந்துள்ளது. மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

2 இளைஞர்கள் பலி

இதில், காயமடைந்த பிரியான்ஷூ என்பவர் கவலைக்குரிய வகையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 8 இளைஞர்களும் வேலை முடிந்த அசதியில், பொருட்களை பாதுகாக்கும் வகையில் பந்தலிலேயே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பந்தலில் மின் கசிவு ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதேபோன்று மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி 2 இளைஞர்கள் பலியானார்கள்.

SCROLL FOR NEXT