உஜ்ஜைன்
மத்திய பிரதேசத்தில் ஓட்டல் அறையை சுத்தம் செய்யும்போது 4 ஊழியர்கள் உள்ளே சிக்கி உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உஜ்ஜைன்-திவாஸ் சாலையில் ஸ்ரீகங்கா என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கீழ்தளத்தில் உள்ள அறை ஒன்றில் சுத்தம் செய்யும் பணிக்காக இரவில் ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து 2 பேர் முதலில் உள்ளே சென்று தூய்மைப்பணியில் இறங்கினர். எனினும், அவர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்கள் வெளியே வராத நிலையில், அவர்களுக்க என்ன நடந்தது என்று அறிந்து கொள்வதற்காக, வேறு 2 பேர் உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் அனைவரும் சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மாதவ் நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. இதன்பின்னர், அறையின் கதவை கட்டர் இயந்திரம் கொண்டு அறுத்து, ஏறக்குறைய ஒன்றரை மணிநேர முயற்சிக்கு பின்னர், 4 பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர். எனினும், அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர்.
4 பேரும் சிக்கி கொண்டபோது, அவர்களை காப்பாற்ற ஊழியர் ஒருவர் சென்றிருக்கிறார். அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் வெளியே வந்து விட்டார். எனினும், 4 பேரை காப்பாற்ற உள்ளே சென்ற மேலும் 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த மீட்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.