போபால்,
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி மணமகள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கூறியுள்ளார். அப்போது, மணமகள் குடும்பத்தினர் போட்டோகிராபரை கண்டித்துள்ளனர்.
அப்போது, மணமகள் குடும்பத்தினருக்கும், மணமகன் குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மேஜை, சேர் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கிக்கொண்டனர். இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.