வயநாடு,
கேரள மாநிலம் வயநாடு கல்லடியில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, அங்கு நின்ற டேங்கர் லாரி ஒன்றும் அடித்துவரப்பட்டது. அந்த லாரிக்கு அடியில் சிக்கிய இருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மதுரையை பூர்வீகமாக கொண்ட பால்ராஜ் - கூடம்மாள் தம்பதியினர் தோட்ட தொழிலாளர்களாக வயநாடு மாவட்டம் மேம்பாடியில் வேலை பார்த்து வருகின்றனர். நிலச்சரிவின்போது நடந்தது குறித்து அந்தத் தம்பதியினர் கூறியதாவது:-
நாங்கள் வங்கிக்கு செல்வதற்காக சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தோம். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் திரும்பிப் பார்த்தபோது முழு மலையுமே சரிந்து வந்ததுபோல் இருந்தது.
உயிர் தப்பிக்க நாங்கள் எதிர் திசையில் ஓடினோம். எங்களுக்கு பின்னால் டேங்கர் லாரி குலுங்கியபடி, எங்களை துரத்தி வருவதுபோல் இருந்தது. அதில் இருந்து தப்பிக்க ஓடும்போது தவறி விழுந்துவிட்டோம். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சாவின் விளிம்பு வரை சென்று மீண்டும் உயிர் பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.