புதுடெல்லி,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். இதனால் அந்த தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தடை விதிக்க மறுத்து கடந்த மாதம் 24-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சுதன் சார்பில் வக்கீல் மெர்லின் ரேச்சல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், காலியாக உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை அறிவிப்பதில் இருந்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தங்கள் சொந்த சுயவிருப்ப ராஜினாமாவால் இந்த காலியிடங்களை உருவாக்கிய எதிர்மனுதாரர்கள், அந்த இடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தை தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக வாதிட முடியாது.
இந்தமேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை அக்டோபர் 6-ந்தேதி நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் அனைத்து மேல் நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். மாற்று ஏற்பாடாக மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதித்தீர்ப்பு வழங்கப்படும்வரை இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கைக்கும் முடிவு அறிவிக்கப்படுவதற்கும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.