தேசிய செய்திகள்

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி தெரியாவிட்டால் உரிமம் ரத்து - மராட்டிய அரசு அதிரடி சட்டதிருத்தம்

மராத்தி மொழி தெரியவில்லை என்பது தெரியவந்தால், மொழியை கற்றுக்கொள்ள ஒரு மாதம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ, டாக்சி மற்றும் செயலி மூலம் இயங்கும் கால் டாக்சி டிரைவர்களுக்கு அடிப்படை மராத்தி தெரிந்து இருக்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. இதற்காக மராத்தி மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

டிரைவர்கள் மராத்தி மொழியை கற்றுக்கொள்வதற்காக விதிக்கப்பட்ட காலக்கெடு நாளை (சனிக்கிழமை) முடிகிறது. இதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று போக்குவரத்து மந்திரி பிரதாப் சர்நாயக் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் புதிய நடவடிக்கையாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மராத்தி மொழி தெரிந்து இருப்பதை கட்டாயமாக்கி, 1989-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் பெர்மிட் வாங்க விண்ணப்பிப்பவர்கள், மற்ற தகுதிகளுடன் மராத்தி மொழி பேசும் அடிப்படை அறிவையும் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை டிரைவருக்கு மராத்தி மொழி தெரியவில்லை என்பது தெரியவந்தால், அவருக்கு மொழியை கற்றுக்கொள்ள ஒரு மாதம் அவகாசம் கொடுத்து அதிகாரி நோட்டீஸ் அனுப்புவார்.

அதன் பிறகும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள தவறினால், அவரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும். தொடர்ந்து விதி களை மதிக்காமல் இருந்தால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். அதற்கு முன் டிரைவருக்கு விளக்கம் அளிக்க நியாயமான வாய்ப்பு வழங்கப்படும். இந்த விதிகள் பெர்மிட் புதுப்பித்தலுக்கும் பொருந்தும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.