தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா: அசைவ உணவு கேட்டதால் மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்

மகனை கொலை செய்த தந்தையையும், சாட்சிகளை மறைக்க முயன்ற தாயையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புனே,

இந்துக்களின் புனிதமான மாதத்தில் அசைவ உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டதால் மகனை அடித்து கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகன் அடித்து கொலை

மகாராஷ்டிர மாநிலம் புனேவின் வார்ஜே பகுதியை சேர்ந்தவர் பகவத் கெய்க்வாட் (64). இவருடைய மனைவி பார்வதி (வயது 60), இவர்களின் இளைய மகன் மகேஷ் (வயது 30) கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி மதுகுடித்து வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் அசைவ உணவு கேட்டு பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்துள்ளார்.

ஆனால் இந்துக்கள் அசைவ உணவை தவிர்க்கும் புனிதமான சிரவண மாதம் நடந்து கொண்டிருப்பதால், வீட்டில் அசைவ உணவு ஏதும் சமைக்காமல் இருந்துள்ளனர். இந்த நேரம் வீட்டிற்கு வந்து அசைவ உணவு கேட்டு பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மகேஷ். அசைவம் வேண்டாம் என்று எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. இதனால் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மகேஷை அவரது தந்தை பகவத் கெய்க்வாட் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மகேஷ், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் பெற்றோர் அவரை எழுப்பியபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதனால் பதற்றமடைந்த அவர்கள், கொலையை மறைக்க திட்டமிட்டு, மூத்த மகன் கணேஷிடம் சென்று, நடந்த சம்பவத்தை மாற்றி கூறி உள்ளனர். மகேஷ் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்ததாகவும், அதன்பின்னர் காலையில் எழுப்பியபோது இறந்து கிடந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் தன் தம்பி இரவு 8.30 மணிக்கே வீட்டிற்கு வந்ததை நேரில் பார்த்துள்ளார். இதனால் பெற்றோர் நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.

குற்றவாளிகள் கைது

இதனால் கணேஷ் அருகிலுள்ள வார்ஜே போலீஸ் நிலையத்திற்கு சென்று மகேஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வார்ஜே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்காயங்களால் உயிரிழந்தது தெரியவந்தது. எனவே, பெற்ற மகனை கொலை செய்த தந்தையையும், சாட்சிகளை மறைக்க முயன்ற தாய் பார்வதியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.