தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம்: போலீசார் முன்னிலையில் பெண் டாக்டரை அறைந்த கைதி - நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்

பெண் டாக்டர் மீது கைதி தாக்குதல் நடத்தியதை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள தலேகாவ் ஷியாம்ஜி பந்த் பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை 5 போலீசார் காதிர் அலி ரசாக் அலி என்ற கைதியை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனையின்போது, போலீசார் முன்னிலையில், ரசாக் அலி திடீரென பெண் டாக்டர் ஸ்ரத்தா பூம்ரேவை கன்னத்தில் அறைந்தார்.

ஒருநிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் பெண் டாக்டர் அதிர்ச்சியில் உறைந்து போனார். உடனே அருகில் இருந்த போலீசார் கைதியை மடக்கிப்பிடித்து வெளியே இழுத்துச்சென்றனர். இந்த சம்பவம் காட்டுத்தீயாய் பரவியதையடுத்து அப்பகுதி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தியவருடன் 5 போலீசார் இருந்தும் இதை தடுக்க முடியவில்லையா? எனக் கேள்வி எழுப்பினர் மேலும் தாக்குதல் நடத்திய கைதி மீது கடும் நடவடிக்கைக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT