ராஞ்சி: பிரேக் சரியாக செயல்படாத நிலையில், காலியாக இருந்த வந்தே பாரத் ரெயில் 463 கி.மீ. தூரம் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி நோக்கி, காலியாக இருந்த வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகளை சரக்கு ரெயில் என்ஜின் மூலம் கொண்டு செல்ல கடந்த அக்டோபர் 24-ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது வந்தே பாரத் ரெயிலின் பிரேக் அமைப்பை சரக்கு ரெயில் என்ஜினுடன் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால், ரெயில்வே ஊழியர்கள் முறையாக இணைக்கவில்லை என கூறப்படுகிறது.இதற்கிடையே, ரெயிலின் பிரேக் சரியாக செயல்படவில்லை என்பதை கண்டறிந்த என்ஜின் டிரைவர், ராஞ்சி ரெயில் நிலையத்தில் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இருப்பினும், அந்த ரெயில் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்பட்டது.
முரி ரெயில் நிலையத்தில் பொறுப்பேற்ற மற்றொரு என்ஜின் டிரைவரும் பிரேக் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.உத்தரபிரதேச மாநிலம் சந்தாலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா ரெயில் நிலையத்தை சென்றடைந்த பிறகுதான் அதிகாரிகள் ரெயிலை ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து பெட்டிகளிலும் பிரேக் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
.ரெயிலின் பிரேக்குகளை முறையாக ஆய்வு செய்யாத பராமரிப்புப் பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ரெயிலை இயக்கிய என்ஜின் டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரின் அலட்சியம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் தென்கிழக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.