தேசிய செய்திகள்

தேர்தலில் பாஜக முறைகேடு செய்வதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு: சுவேந்து அதிகாரி பதிலடி

பாஜக சொல்வதை தேர்தல் அதிகாரிகள் செய்வதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று 142 தொகுதிகளுக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தேர்தல் ஆணையம், சிஆர்பிஎப் படையினர் மற்றும் பாஜகவினர் மீது மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.மம்தா பானர்ஜி கூறுகையில், “வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனினும், மேற்கு வங்கத்தை பற்றி தெரியாத அதிகாரிகள் பலர் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு அதிகாரி மேற்கு வங்கம் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தினார். நான் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். திரிணமூல் காங்கிரஸ் முகவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டு, அவர் போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். எங்கள் கட்சியினரை குறிவைக்கிறார்கள்.

இன்று காலையில் எனது கட்சியின் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரவு முழுவதும் எங்கள் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். இது என்ன மாதிரியான அராஜகம்? வாக்குப்பதிவு இப்படியா நடைபெறும்? வாக்குப்பதிவு என்பது ஜனநாயக திருவிழா. ஆனால் அதை அவர்கள் முற்றிலும் சீரழித்துவிட்டனர். தேர்தலை வலுக்கட்டாயமாக முறைகேடாக நடத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது. எங்கள் கட்சியினரும் மக்களும் உயிர் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர். ஆனால் இடத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்” என்றார்.

மம்தாவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள சுவேந்து அதிகாரி, “ரவுடி கும்பலினருடன் சுற்றித்திரிந்து வாக்காளர்களை அச்சுறுத்த மம்தா முயற்சி செய்கிறார். பவானிபூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் போது இந்து வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்” என்றார்.