பவானிபூர்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மே 7-ந்தேதியுடன் அதன் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதற்காக, சர்வே கட்டிடத்தில் தன்னுடைய வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்திருக்கிறார். ஏற்கனவே 3 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த அனுபவம் கொண்ட மம்தா பானர்ஜி இந்த முறையும் வெற்றி பெறும் நோக்கில் இருக்கிறார்.