தேசிய செய்திகள்

ராஜினாமா செய்ய மம்தா மறுப்பு: மேற்கு வங்காள சட்டசபையை கலைத்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுத்த நிலையில், அம்மாநில சட்டசபையை கலைத்து ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

கொல்கத்தா,

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு புதிய அரசு பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் 15-வது சட்டமன்ற ஆட்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் சட்டமன்றத்தை முறையாக கலைத்து கவர்னர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுபற்றிய தகவல் நேற்று வெளியான அரசிதழில் வெளியாகி இருந்தது. அதில், இந்திய அரசியலமைப்பின் 174-வது பிரிவின் (2)வது உட்பிரிவின் (பி) பிரிவின்படி எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கேரள கவர்னரான நான், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதினைந்தாவது கேரள சட்டமன்றத்தை இன்று, மே 6, 2026 முதல் கலைக்கிறேன் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு 140 தொகுதிகளில் 102 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதேபோல மேற்கு வங்காளத்திலும் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை கலைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போதைய சட்டமன்றம் மே 2021-ல் அமைக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு கட்டத் தேர்தல்களைத் தொடர்ந்து, பதவிக்காலம் முடிவடையவுள்ள சட்டமன்றத்தை கவர்னர் முறையாக கலைத்து அறிவித்து உள்ளார். மம்தா பானர்ஜி, பா.ஜனதாவின் வெற்றியை ஏற்க மறுத்து, தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வந்த நிலையில் கவர்னரின் சட்டமன்ற கலைப்பு உத்தரவு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.