தேசிய செய்திகள்

கொல்கத்தாவை தாக்குவோம் என்கிறது பாகிஸ்தான்.. பிரதமர் மோடி மவுனம் காப்பதா? மம்தா பானர்ஜி கண்டனம்

இந்திய குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகித்து கொள்ளமாட்டோம் என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி காஜா ஆசிப் கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கவில்லை?

இதன் பின்னணி என்ன? வரைவு திட்டம் தயாரா? தேர்தலுக்கு முன்பாக மற்றொரு பஹல்காம் தாக்குதலுக்கு திட்டமா?

மேற்கு வங்காள மக்களைக் குறிவைத்தால் அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இந்திய குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களை சகித்துக் கொள்ளமாட்டோம். நீங்கள் (பிரதமர்) ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த திட்டமா?" என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.