மம்தா பானர்ஜி 
தேசிய செய்திகள்

வேட்பாளர்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களைவிட்டு வெளியேறவேண்டாம்.. மம்தா பானர்ஜி உத்தரவு

தற்போதுள்ள முன்னிலை நிலவரங்களைப் பார்த்து நம்பிக்கை இழக்கவேண்டாம் என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. மட்டும் 189 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, பாஜக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை வாக்கு எண்ணும் மையங்களை விட்டு வெளியேற வேண்டாம் என அக்கட்சியின் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ‘அவசர செய்தி’ என்ற தலைப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களோ அல்லது வாக்கு எண்ணிக்கை முகவர்களோ, வாக்கு எண்ணிக்கை மையங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் இன்னும் நாம் முன்னிலையில் இருக்கிறோம். எனவே நம்பிக்கை இழக்கவேண்டாம்.

ஆனால் நாம் முன்னிலையில் இருக்கும் பகுதிகளில் முடிவுகளையோ அல்லது முன்னிலையையோ அறிவிக்காமல் இருப்பது, தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து வகுத்துள்ள ஒரு வியூகமாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மம்தாவின் இந்த செய்தியையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து விழிப்புடன் கவனித்து வருகின்றனர்.