தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நள்ளிரவில் பார்வையிட்ட மம்தா பானர்ஜி

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கொல்கத்தா,

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பாபனிபூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள சக்வத் நினைவு பள்ளிக்கூடத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நள்ளிரவு திடீரென பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முயற்சி நடைபெற்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.