தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது.

புதுடெல்லி,

மிக பாதுகாப்பான இடமாக கருதப்படும் டெல்லி விமான நிலையத்திற்குள், நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக நுழைய முயன்ற முயற்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படை முறியடித்தது.

விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் பயணிகள், தங்களின் பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களிடம் சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். விமான நிலைய ஊழியர்களும் உள்ளே நுழையத் தங்களின் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்திற்கு, சிஐஎஸ்எஃப் படையினர் ஆயுதமேந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த நுழைவு வாயில் 3-ல் முறையான ஆவணங்களின்றி ஒருவர் நுழைந்துள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் சோதனையின் போது அத்துமீறி புறப்பாடு வாயிலுக்குள் நுழைந்தவரை அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் டெல்லி போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில், அந்த நபர் அரியானா மாநிலம், சோனிபட்டைச் சேர்ந்த குணார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முறையான நுழைவு (விசா) அல்லது பயண ஆவணங்கள் ஏதுமின்றி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட நபர் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நோக்கில், முறையான விசா அல்லது பயணத்திற்குத் தேவையான ஆவணங்கள் ஏதுமின்றி அவர் விமான நிலையத்திற்குள் நுழைய முயற்சித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்த நபரின் தந்தை கூறுகையில், குணால் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT