தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஓட்டல் உரிமையாளர் கொலை - தலைமறைவாக இருந்தவர் தமிழ்நாட்டில் கைது

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஓட்டல் உரிமையாளரை கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார்.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ஷில் டைய்ஹர் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தவர் சைபல் சயது (வயது 31). இவரது ஓட்டலில் அதேபகுதியை சேர்ந்த அகமது ஹம்சி (வயது 25) பணியாற்றி வந்தார். அதேவேளை, ஓட்டலில் சரிவர வேலை செய்யாததால் அகமது ஹம்சியை ஓட்டல் உரிமையாளர் சைபல் சயது வேலையில் இருந்து நீக்கினார்.

ஓட்டல் உரிமையாளர் கொலை

இதனால் ஆத்திரமடைந்த அகமது ஹம்சி கடந்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி தனது கூட்டாளிகள் 3 பேருடன் ஓட்டலுக்கு வந்து சைபல் சயதுவுடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மறைத்து கொண்டு வந்த ஆயுதத்தால் சைபல் சயதுவை 4 பேர் கொண்ட கும்பலும் கடுமையாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் ஓட்டல் உரிமையாளர் சைபல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபல் சயதுவை கொலை செய்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், கொலையாளிகளில் ஒருவரான அகமது ஹம்சி தலைமறைவானார். அவரை தேடும் பணியில் தானே போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கைது

இந்நிலையில், கொலை வழக்கில் ஓராண்டுக்குமேல் தலைமறைவாக இருந்த அகமது ஹம்சி தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக தானே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு விரைந்து வந்த மராட்டிய போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த அகமது ஹம்சியை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அகமது ஹம்சி மராட்டியத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அகமது ஹம்சி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.