தேசிய செய்திகள்

ஆசை வார்த்தை கூறி 180 பெண்களிடம் சில்மிஷம்... 350 ஆபாச வீடியோக்கள் - மராட்டியத்தில் கைதான வாலிபரின் வீடு இடிப்பு

வீடியோக்களை காட்டி இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என முகமது அயாஸ் மிரட்டியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பரத்வாடா நகரை சேர்ந்த வாலிபர் முகமது அயாஸ். இவர் வாட்ஸ் அப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.

பின்னர் அவர்களை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்ட முகமது அயாஸ், அவர்களது ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோக்களை காட்டி இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என முகமது அயாஸ் மிரட்டியுள்ளார். இதில் சில வீடியோக்களை அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.பி. விஷால் ஆனந்திடம் மாநிலங்களவை எம்.பி. அனில் போண்டே புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், முகமது அயாசை அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் முகமது அயாசின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அதில் சுமார் 180 சிறுமிகளின் 350-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோக்களை முகமது அயாஸ் யாருக்கெல்லாம் பகிர்ந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் அனில் போண்டே எம்.பி. எச்சரித்துள்ளார். இதற்கிடையில், பரத்வாடா பகுதியில் உள்ள முகமது அயாசின் வீட்டில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி, வீட்டின் ஒரு பகுதியை ஜே.சி.பி. மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரவீன் தயாடே மேற்பார்வையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.