கொல்கத்தா,
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு. நேற்று டம்டம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது 4 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க மனைவியுடன் வந்திருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள லிப்டில் அவர்கள் சென்றபோது, அது திடீரென பழுதடைந்து பாதியிலேயே நின்றது. இதனால் அவர்கள் லிப்ட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அந்த லிப்டில் ஆபரேட்டர் யாரும் இல்லை என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.