மும்பை,
மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்
நாடு முழுவதும் இந்து மதப்பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியின் நிறைவாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இயற்கை நீர்நிலைகள் இல்லாத பகுதிகளில் செயற்கையாக நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
மின்சாரம் தாக்கி பலி
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையின் ஷியாம் நகர் பகுதியில் விநாயகர் சிலை கரைப்பிற்காக செயற்கையான குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை குளத்தில் நேற்று காலை விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையடுத்து அந்த குளம் மூடப்பட்டது. ஆனால், நேற்று மாலை அப்பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த ரோகித் ரதோர் (வயது 19) என்ற இளைஞர் செயற்கை குளத்திற்குள் இறங்கியுள்ளார்.
அப்போது, எதிர்பாராத மின்சார ஒயர் குளத்தில் விழுந்து குளம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், ரோகித் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.