தேசிய செய்திகள்

வருங்கால மனைவியுடன் பாறையில் செல்பி எடுக்கும் போது கால் தவறி விழுந்து வாலிபர் பலி

விஷால், வருங்கால மனைவி மற்றும் அவரது 2 நண்பர்களும் லோகட் கோட்டைக்கு மலையேற சென்றனர்.

புனே,

மராட்டியம் புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுக்காவில் அமைந்துள்ள கஹுன்ஜேவைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (வயது 26). இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

திருமணம்

அவருக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது.மேலும் திருமணத்திற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையை இரண்டு குடும்பத்தினரும் முன்பதிவு செய்திருந்தனர். அகர்வால் தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளை டிரக்கிங் சென்று கொண்டாட விரும்பினார்.

செல்பி

இதையடுத்து நேற்று வியாழக்கிழமை காலையில் விஷால், வருங்கால மனைவி மற்றும் அவரது 2 நண்பர்களும் லோகட் கோட்டைக்கு மலையேற சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியது. இவர்களின் மலையேற்றப் பயணத்தின் போது காலை 10.30 மணியளவில் விஷாலும் அவரது வருங்கால மனைவியும் செங்குத்தான பாறையின் மீது நின்று செல்பி எடுத்தனர்.

உயிரிழப்பு

அப்போது எதிர்பாரத விதமாக விஷாலின் கால் பாறையில் வழுக்கி சுமார் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையினர் மற்றும் சிவதுர்க் அவசர மீட்புக்குழு ஆகியோர்கள் சேர்ந்து சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கடினமான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த தாவரங்களுக்குள் இருந்து விஷாலின் உடல் மீட்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரின் இழப்பு இரு குடும்பத்தாருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்துயது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விபத்து மரண வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.