திருவனந்தபுரம்,
புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பு விடுக்கச் சென்ற இடத்தில் வீடு பூட்டியிருந்ததால், அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பாக நின்று நபர் ஒருவர் நகைச்சுவையாகப் பாட்டு பாடி அழைப்பு விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டின் கிரகப்பிரவேச அழைப்பிதழை வழங்குவதற்காக, உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் உறவினரின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றமடையாத அவர், அந்த வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைக் கவனித்தார்.
உடனே, அந்த கேமராவின் முன்னால் சென்று, தனது எதார்த்தமான சூழ்நிலையை விளக்கிப் பாட்டுப் பாடத் தொடங்கினார். அப்போது அவர், "பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் ஏற்கனவே வாங்கி வச்சிருக்கேன். அதனால் நீங்கள் எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், எனக்கு நிறைய கடன் இருக்கிறது. அதனால் பொருளாகத் தராமல் பணமாகத் தந்தால் ரொம்ப நல்லது."தங்களுக்குப் பரிசுப் பொருட்கள் தேவையில்லை, கடன் சுமை இருப்பதால் மொய்ப் பணமாகத் தந்தால் உதவியாக இருக்கும் என்பதை எதார்த்தமாகவும், அதே சமயம் நகைச்சுவையாகவும் அவர் கேமராவில் பதிவு செய்துள்ளார். வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிசிடிவி காட்சிகளைப் பார்த்துவிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற விஷயங்களை வெளியில் சொல்லத் தயங்கும் மனிதர்களுக்கு மத்தியில், தனக்கு இருக்கும் கடன் தேவையை இவ்வளவு வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் சிசிடிவி மூலம் கூறிச் சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.