தானே
மராட்டியத்தில் 12-வது தளத்தில் இருந்து பூனையை தள்ளி விட்டு கொன்ற நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் அம்பர்நாத் பகுதியில் 12-வது தளத்தில் சுவர் மீது பூனை ஒன்று அமர்ந்து இருந்தது. அப்போது, 50 வயதுடைய நபர் ஒருவர் அந்த வழியே சென்றார். அவர் பூனையை பார்த்ததும் அதனை நெருங்கினார்.
இதனால் அச்சத்தில் பூனை மிரண்டு, எழுந்து நகர்ந்தது. ஆனால், அதற்குள் அவர் அந்த பூனையை 12-வது தளத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே தள்ளி விட்டார். பின்னர், என்னவானது என்று எட்டி பார்த்துள்ளார். இதில், அந்த பூனை தரை தளத்தில் விழுந்து, பலத்த காயமடைந்து உயிரிழந்தது.
இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலானது. இதனை தொடர்ந்து விலங்குகள் உரிமைகளுக்கான தன்னார்வலர்கள் மற்றும் நல அமைப்புகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குரல் எழுப்பின.
இதுபற்றி, சிவாஜி நகர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் பிரமோத் பாட்டீல் கூறும்போது, தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர்.
பூனையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். புதிய குற்றவியல் சட்டம் மற்றும் விலங்குகளுக்கான கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.